Template

Avatharama-Archaya

அவதாரமா ? அர்ச்சையா ?

பகவானின் அவதார வைபவங்கள் எல்லாம் —வட தேசத்தில்—-
தென்தேசத்தில் இப்படிப்பட்ட அவதார வைபவங்கள் இல்லை—-

ஆனால்—

அர்ச்சாவதாரத்தில் , தென்தேசமான சோழ நாடு, நடுநாடு ( 42 ) பாண்டிய நாடு, சேரநாடு ( 31 ) மற்றும் தொண்டை நாடு ( 22 ) என்று பகவான் , 95 திவ்ய தேசங்களில் ( மொத்தம் 108 திவ்ய தேசங்கள் ) இருந்தும், கிடந்தும், நின்றும் ஸேவை ஸாதிக்கிறார் — ஸ்ரீ மஹாலக்ஷ்மியும் , தனிக்கோவில் நாச்சியாராகவும், அர்ச்சாவதார மூர்த்தியுடனும் , எழுந்தருளி அருள்கிறாள். புருஷகார பூதையான இவள், இங்கு அயோநிஜையாகப் பற்பல அவதாரங்களை எடுத்திருக்கிறாள். பூமிப் பிராட்டியும் இப்படியே—- அநேக திவ்ய தேசங்களில், அர்ச்சாவதார எம்பெருமான்கள், மாப்பிள்ளையாக இங்கு எழுந்தருளியிருக்கிறார்கள் இந்த வைபவங்கள் தென்தேசத்தில் தானே !

பகவானின் , திவ்ய ஆயுதங்கள் , திவ்ய ஆபரணங்கள் , அவனின் ஆஜ்ஞைப்படி ,ஆழ்வார்களாக இங்கு அவதரித்தார்கள் ஆழ்வார்கள், இந்தத் திவ்ய தேசம் தோறும் சென்று ,மங்களாசாஸனம் செய்திருக்கிறார்கள்—

அதனால்தான் , வடதேசத்தில், தீர்த்தங்கள் ப்ரஸித்தமாக இருந்தாலும், தென்தேசத்தில் மூர்த்தங்கள் ப்ரஸித்தி —-! பகவானை , அர்ச்சாவதார வடிவழகில், ஸேவிப்பவர் அனைவரின் உள்ளங்களும் கொள்ளை போகும்— அதுமட்டுமா—! அர்ச்சையில், அவதார ஸேவையையும் ஸேவிக்கலாம்—

அர்ச்சாவதார அழகில் ஆழங்கால் பட்டவர்கள், ஆயிரமாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்தாலும், அகம் ஆணையிட,ஆண்டுக்கு ஒரு முறையாவது , சுற்றத்துடன் இங்கு வந்து , ஸேவிக்கிறார்கள்— இத்தனைக்கும், அங்கும் அர்ச்சாவதார மூர்த்தியாக அவன் எழுந்தருளியிருக்கிறான்—அங்கும் எல்லா உத்ஸவங்களும் உண்டு ஆனால், ஆழ்வார்கள் மங்களாசாஸனம் செய்த திவ்யதேச எம்பெருமான்கள் அவர்களை இங்கு கட்டி இழுக்கிறார்கள் —

அதனால்தான், இந்தத் தொண்ணூற்று ஐந்து திவ்ய தேசங்களையும் அவர்களும் சரி, நாமும் சரி , நன்கு பராமரிக்க வேணும்—- இதைத் தலைமுறை, தலைமுறையாகச் செய்ய வேண்டும்—- அதற்கு, இந்த விவரங்களை , அடுத்த தலைமுறைக்கு ,அவ்வப்போது, எடுத்துச் சொல்லவேண்டும்—- அவர்களையும் ,இந்தக் கைங்கர்யங்களில் ஈடுபடுத்தவேண்டும் —-

எவ்வளவு பேர் செய்கிறார்கள் —-? இதற்கு , ஒரு அமைப்பு வேண்டாமா ? சிந்தியுங்கள்—-!